காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே
பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும்,
முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும். இதைக்
கட்டிய பெருமை அப்போதைய முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனைச் சாரும்.